நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க., அ.தி.மு.க பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என ஸ்டாலின் முயற்சி எடுத்து நடவடிக்கை எடுத்த போதிலும் ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குற்பட்ட பவானியில் தி-.மு.க. பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.
இது பற்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நடுநிலையான மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது திராவிட முன்னேற்ற கழகம்! கொங்கு மண்டலத்தில் திமுகவை அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வைத்து கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாற வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்.
ஆனால் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பார்தோம் என்றால் அப்படி இருக்கிறதா என்றால் அது கொஞ்சம் சந்தேகமே. ஏனென்றால் பவானி தொகுதியில் சென்ற முறை அனைத்திந்திய அண்ணா திமுக வேட்பாளரை விட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் சுமார் 18 ஆயிரத்து 500 வாக்குகள் கூடுதலாக பெற்றார். பெருந்துறையில் 4 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றார். அப்போது திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது.
ஆனால் இப்போது திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது. தமிழக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்துகளில் மகளிர்ருக்கு இலவச பயணம், முதல் பட்டதாரி மாணவர்களுக்கு உதவித்தொகை, நான் முதல்வன் உள்பட பல்வேறு திட்டங்களில் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
அப்படி இருந்தும் நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பவானி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் பின்னடைவை சந்திக்கிறார். கடந்த முறை அந்தியூரில் 32 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். தற்போது சுமார் 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.
இதை பார்க்கும் போது பவானி சட்டமன்ற தொகுதியில் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகள் செயல்படவில்லையா? அல்லது தி.மு.க. அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று அதை வாக்குகளாக மாற்றவில்லையா? என்ற கேள்வியை உண்மையான உடன்பிறப்புக்கள் எழுப்புகிறார்கள். தவிர, அங்கு அ.தி.மு.க.வுடன் தி.மு.க. ரகசிய கூட்டு வைத்திருப்பதால் ஈரோடு வடக்கில் சரிவை சந்தித்திருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்¤அண்ணா திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை. அப்படி இருந்தும் அண்ணா திமுக பவானி சட்டமன்ற தொகுதியில் நல்ல வாக்குகளை பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் பவானி சட்டமன்ற தொகுதியில் கணிசமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்குகள் உண்டு. அவர்கள் அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்திருந்தால் அங்கு திராவிட முன்னேற்ற கழகம் டெபாசிட் வாங்கியிருக்குமா என்பது சந்தேகமே!
எனவே, திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுத்து எங்கெங்கு வாக்குகள் குறைந்து இருக்கிறதோ அங்கு எல்லாம் கட்சியை பலப்படுத்த வேண்டும். இப்படியே சென்றால் திமுகவில் இருக்கும் சிலரும் அண்ணா திமுகவின் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. இதனை தி.மு.க. தலைமை விசாரித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஈரோடு வடக்கு தி.மு.க.வின் கோட்டையாக மாறும்’’ என்று வருத்தத்துடன் கூறினார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா..?