மீண்டும் ராகுல் புகழ்! எடப்பாடிக்கு எதிராக செல்லூர் ராஜு!

அ.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களை எடப்பாடியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அதனை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்யும் வகையில் மதுரை மாநகர் மா.செ. செல்லூர் ராஜு நிரூபித்து வருகிறார்.

‘ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார் எனவும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வீடியோவை பகிர்ந்து, ”நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனப் பதிவிட்டிருந்தார். பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி.,யை பாராட்டியது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. ”பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எளிமையாக யார் இருந்தாலும் நான் பாராட்டுவேன்” என செல்லூர் ராஜூ பதிலளித்தார்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகு, அது சர்ச்சையான நிலையில் அப்பதிவை நீக்கினார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 19) பிறந்தநாள் கொண்டாடும் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன், அவரை பாராட்டியும் பேசியுள்ளார் செல்லூர் ராஜூ. அவர் கூறுகையில், ”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்வது உறுதியாகியிருக்கும் நிலையிலும் செல்லூர் ராஜு காங்கிரஸை புகழ்ந்து பேசுவதை அ.தி.மு.க.வினரே ரசிக்கவில்லை. அ.தி.மு.க. எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகமே தற்போது எழுந்திருக்கிறது. செல்லூர் ராஜு போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை கண்டிக்க முடியாத எடப்பாடி அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எப்படிக் கட்டிக்காக்கப் போகிறார் என்ற குரலை எழுப்புகின்றனர் ர.ர.க்கள்..!

By R Priyu

Related Post