கலைஞர் – ஜெயலலிதா காலத்தில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்ட வசதியாக காவிரி மற்றும் கொள்ளிடத்தில் மணல் குவாரிகள் மூலம் குறைந்த விலையில் மணல் விற்கப்படும். இதனால் ஏழை மக்கள் முதல் கட்டுமான நிறுவனங்கள் வரை பலனடைந்து வந்தனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் சரி, தி.மு.க. ஆட்சியிலும் சரி மனல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாகக் கூறி வழக்கு தொடுப்பதாலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என்பதால் மணல் குவாரிகள் செயல்படுவதில்லை. இதனால், ஏழை, எளிய மக்கள் அதிக விலைக்கு விற்கப்படும் எம்.சாண்ட் மணலை வாங்க முடிவதில்லை. கட்டுமான நிறுவனங்களுக்கு மணல் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையும் விண்ணைத் தொட்டுவிடுகிறது.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் மணல் குவாரிகளில் சுமார் 4 ஆயிரம்கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமைக்கு கடிதம் அனுப்பியிருப்பதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக மணல் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை, வேலூர், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தனர். இந்த நிலையில்தான் கரூர், திருச்சி, டெல்டா பகுதிகளில் 26 மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டது ஏழை, எளிய மக்கள்தான்.
இது தொடர்பாக மணல் லாரி ஓட்டுநர்களிடம் பேசியபோது, ‘‘சார் மணல் குவாரிகளால் ஏழை, எளிய மக்களும் கட்டுமான நிறுவனங்களும் பலனடைவது வழக்கம். ஆனால், மணலில் முறைகேடு நடக்கிறது என எதிர்க்கட்சி உள்பட சில அதிகாரிகள் குவாரி நடத்துபவர்களிடம் பணத்தை கறக்கின்றனர். குவாரி நடத்துபவர்கள் முறையாக அரசுக்கு ஏலத்தொகை செலுத்து, வண்டி வாகனத்தை வைத்துதான் தொழில் செய்கின்றனர். எந்தவொரு தொழிலையும் செய்துபார்த்தால்தான், அதில் உள்ள இன்னல்கள் நமக்கு புரியும்..!
மணலில் மிகப்பெரிய லாபம் வருகிறது என மணல் குவாரி ஏலம் எடுத்தவர்களிடம் பணத்தை கறப்பதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். அப்படி பணம் கொடுக்காத பட்சத்தில் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அவர்களுக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்த வகைகளில் கொடுத்து வருகின்றனர். அரசு இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏழை மக்கள் வீடு கட்டும் கனவை நிறைவேற்றிட மீண்டும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்’’ என்றனர்.
குற்றம் சொல்பவர்கள் குற்றம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழக அரசு என்ன செய்யப் போகிறது.