அதிமுகவில் கருப்பு ஆடுகள்! நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

அ.தி.மு.க.வில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுத்தால்தான் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராக முடியும். இல்லாவிட்டால், 2026க்குப் பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்பதே தெரியாது என்கிறார்கள் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள். அதற்கான காரணத்தையும் சில உதாரணங்களோடு விளக்கினார்கள்.

அதாவது ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நடந்திருக்கும் சம்பவத்தை புள்ளிவிபரங்களோடு விளக்கினார்கள்.

சாதிய வாக்குகளை பெறுவதிலும், சாதிய அரசியலிலும் கருணாநிதியை மிஞ்சிவிட்டார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தன் சொந்த சாதியின் பலத்தையும் இழந்து வருகிறார் என்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பாடம் ஸ்டாலின் மனதைத் துளைத்தது. டிஆர்பிராஜா கோவையில் தனக்கு கொடுத்த பணியைத் தலைமைக்குக் கட்டுப்பட்டு நல்லமுறையில் செயலாற்றிக் காட்டினார். ஆனால், டெல்டாவில் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கு திமுகவிற்கு சாக்களித்தது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தில் கள்ளர், மறவர் சமுதாயத்தைத் தன்வசம் வைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆளுமையை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் செலுத்தி வந்தார். அதைக ருத்தில் கொண்ட கருணாநிதி அவர்கள்அதற்குநேர்மாறான அகமுடையார், பார்கவ்குல உடையார், வெள்ளாளர் மற்றும் இஸ்லாமியர்களைக் கொண்டு பதில் அரசியல் செய்தார். இதற்குத் தூணாக டெல்டா மாவட்டத்தில் கோ.சி. மணி இருந்தார். தென்மாவட்டங்களில் பொன். முத்துராமலிங்கம், தா.கி. அவர்களும் வலுசேர்த்தனர்.

குறிப்பாக தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கள்ளர் மற்றும் பிறமலைக் கள்ளர் சுமார் 18 லட்சமும், மறவர் சமுதாயம் சுமார் 12 லட்சமும், அகமுடையார் சமுதாயம் சுமார் 32 லட்சமும் உள்ளனர்.

அதிமுகவில் ஒட்டு மொத்த டெல்டா மற்றும் தென்மாவட்டத்தின் அகமுடையார் சமுதாயத்தின் பிரதிநிதியாக ஓ.எஸ். மணியன் மட்டுமே இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு திமுகவின் அதே சமுதாயத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி. ராஜா மந்திரி ஆக்கப்பட்டார். டி.ஆர்.பி. ராஜாவை வைத்து அந்த சமுதாயத்தின் வாக்கை அறுவடை செய்ய நினைத்த ஸ்டாலினின் கனவை நாம் தமிழர் கட்சி தகர்த்தது.

எடுத்துக்காட்டாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அனைத்து பாராளுமன்றத்திலும் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகளை குவித்தது. இதன் எதிரொலியாக ஸ்டாலின் சட்டப் பேரவையில் நீண்டகாலம் கிடப்பில் கிடந்த மாமன்னர் மருதுபாண்டியர், பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை இவர்களின் சிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் டெல்டாவை தன்கைக்குள் வைத்து விடலாம் என எண்ணுகிறார், இதன் பிரதிநிதியாக டிஆர்பிராஜாவையும் பிரதிபலிக்கச் செய்கிறார்.

ஆனால், இதுசட்டமன்ற அறிவிப்பாக மட்டும் இருக்குமா இல்லை நிறைவேற்றப்படுமா என்பதை சட்டமன்ற தேர்தலுக்குள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதிமுகவில் உள்ள குளறுபடி என்ன வென்றால், தனக்கு எதிராக வாக்கு அளிக்கும் கள்ளர், மறவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே காரணம். கிட்டத்தட்ட பத்து கள்ளர் மாவட்டச் செயலாளர்களும் ஐந்து மறவர் மாவட்டச் செயலாளர்களும் உள்ளனர். இவர்கள் எல்லோருமே இன்றளவிலும் டி.டி.வி. தினகரனுடன் நேரடியாகவும், அலைபேசி வாயிலாகவும் தொடர்பிலா உள்ளனர்.

அரசியல் சாணக்கியனான எடப்பாடி வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்தன் சாணக்கியத்தனத்தால் திமுகவை அதிர்ச்சியடைய வைத்தார். ஆனால், தன்னிடம் இருக்கும் கள்ளர், மறவர் மாவட்டச் செயலாளர்கள் ஏமாற்றுவதைத் தான் அறியாமல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். மதுரையில் முதல் முறையாக அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன் சீட்கொடுக்கப்பட்டது அதை ஏற்றுக் கொள்ள முடியாத செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பாவும் உள்ளடி வேலை செய்து அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளினர்.

இது போன்ற நிகழ்வு டெல்டாவிலும் அரங்கேறியது இரா.காமராஜ் தேமுதிக பாராளுமன்ற வேட்பாளரை எலக்சன் முடியும் வரை கண்டு கொள்ளவே இல்லை. தொண்டர்களோ டீ குடிப்பதற்கு கூட மாஜி பணம் எடுக்கவில்லை என்கின்றனர். அவர் பொறுப்பு வகித்த நாகப்பட்டினம் பகுதிகளிலும் வேலை செய்யவில்லை, அவர் பொறுப்பில் உள்ள பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் ஒன்றரை லட்ச வாக்குகள் பின்னடைந்தனர். அதுவேஓ.எஸ்.மணியன் பொறுப்பு வகித்த மூன்று தொகுதிகளில் 45 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பின்னடைவானது. அங்குள்ள தொண்டர்கள் காமராஜ்தன் சமுதாயத்தினரைத் தவிர மற்ற எவரையும் கண்டு கொள்வதில்லை என புலம்புகின்றனர்.

இன்றளவிலும் தினகரனின் நாடித் துடிப்பாகத்தான் செயல்படுகிறார் காமராஜ். எடப்பாடியோ விழித்துக்கொண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கவுண்டர் சமுதாயத்திற்கு நிகராக உள்ள அகமுடையார், உடையார் மற்றும் வேளாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் செய்யவேண்டும் ‌மற்றும் மாவட்டச் செயலாளர்களாகவும் அவர்களை பதவியில் அமர்த்தவேண்டும். வருங்காலங்களில் தனக்கு துரோகம் செய்பவர் களையெடுத்தால் மட்டுமே 2026-ல்ஆட்சி என டெல்டா மற்றும் தென்மாவட்டத் தொண்டர்கள் புலம்புகின்றனர்.

பொருளாதாரத்தைக் கொண்டு மட்டுமே முடிவுகளை எடுக்கும் எடப்பாடி முன்னாள் மாஜிகளைக் கேள்வி கேட்க அஞ்சினால் அவரின் முதல்வர் கனவு 2026-ல் சுக்கு நூறாக்கப்படும். ஸ்டாலினின் இந்த கணக்கு அவருக்கு வலுவைத்தான் சேர்க்கிறது. இன்னும் ஆறுமாதகாலத்திற்குள் எடப்பாடி தானாக முன் வந்து சில களையெடுப்புகளை அமைப்பு ரீதியாக நடத்தாவிட்டால் அவருக்கு தோல்வியே பரிசாகும் அவருக்கு அரசியலில் ஜூனியரான சீமான், அண்ணாமலை அவர்களின் கணக்கு கூட டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் வெற்றி பெற்றது. பிஜேபியில் டெல்டா மற்றும் தென்மாவட்டத்தின் முகமாக அறியப்படும் கருப்பு முருகானந்தம் தற்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தவித அமைப்பு பலமின்றி ஒருலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேலானதன் சமுதாயத்தின் வாக்கைப் பெற்று அந்த சமுதாயத்தை பிஜேபி வழியில் இழுக்க பார்க்கிறார்.

சீமானோ ஒரு படிமேல் சென்று மன்னார்குடி தாலுகா பரவைக்கோட்டை கிராமத்தின் பெண் ஒருவரை சிவகங்கை பாராளுமன்றத்தின் வேட்பாளராக்கியது சுமார் ஒருலட்சத்து 63 ஆயிரம் வாக்குகளை பெறச் செய்தது. அதற்குக் காரணம், அந்தப் பெண் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதே. இந்தச் சம்பவம்தான் ஸ்டாலின் மனதைக் காயப்படுத்தியது.

இந்தப் பின்னணியில்தான் சட்டப்பேரவையில் வேலுநாச்சியார், மருதுபாண்டியர், பட்டுக்கோட்டை நாடி முத்து பிள்ளை இவர்களுக்கு சிலை திடீரென அறிவிக்கப்பட்டது.

சாதிய வாக்குகளை வளைப்பதிலும், சாதிய அரசியலிலும் கலைஞரை பின்னுக்குத் தள்ளிவிட்டார் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப் போகிறார் என்று ர.ர.க்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

By R Priyu

Related Post