அதிமுகவில் விலகவேண்டியது யார்? மருது அழகுராஜ் கேள்வி..?

அ.தி.மு.க.விலிருந்து விலக வேண்டியது சசிகலாவா… எடப்பாடியா..? என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்..!

இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று திருமதி சசிகலா அவர்கள் மனதார,உளமார நினைத்தால் திருமதி ஜானகி அம்மையார் கட்சி பிளவுபட்ட போது அறிக்கை விட்டது போல இவர்களும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஜெயலலிதாதான் அதிமுகவை இனி ஏற்று நடத்துவார், அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஜானகி அம்மையார் அறிக்கை வெளியிட்டதைப்போல, நற்பண்புடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலாவும் செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர்.

அண்ணா திமுக கட்சிக்கென்று விதிமுறைகள் உண்டு. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் தான் ஒரு சிலர் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது’’ என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரும், அந்த அணியில் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ்,
‘‘விலகவேண்டிவர் #எடப்பாடிதானே!’’ என வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் மருது அழகுராஜின் பதிவில், ‘‘ஜானகி அம்மா போல விட்டுக்கொடுப்பதற்கு நீங்க ஒன்னும் தனித்து நின்னு இரட்டை இலையின் தயவு இல்லாமல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே எதிர்கட்சித் தலைவராக உயர்ந்த புரட்சித் தலைவி இல்லையே..!

அதனால பத்துத் தேர்தல்களில் தொடர்ந்து தோற்று கட்டுத்தொகையையே இழக்கும் அளவுக்கு கட்சியை படுகுழியில் தள்ளிவிட்ட நீங்க தான் விட்டுக் கொடுத்து விட்டு விலகியிருக்க வேண்டியவர்..!

இதைத் தான் தொண்டர்கள் மட்டுமல்ல உங்களை சுற்றியிருப்பவர்களும் விரும்புகிறார்கள்.. என்ன நாஞ் சொல்றது..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

மருது அழகுராஜ் சொல்வது போல பத்து தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தோல்வியைத் தழுவியிருக்கிறார். வருகிற 11வது தேர்தலான 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றால், அக்கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை..!

By R Priyu

Related Post