அ.தி.மு.க. ஒருங்கிணைப்பை எடப்பாடி பழனிசாமி விரும்பாததால், சசிகலா தலைமையின் கீழ் எஸ்.பி.வேலுமணி வசமாகிறதா அ.தி.மு.க. என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘வருகிற 2026 தேர்தலுக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்படியானால், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்கமாட்டோம்’ என தெளிவாக சொல்லிவிட்டார். இந்த நிலையில்தான், கே.சி.பழனிசாமி, ‘அ.தி.மு.க. என்ற அவங்க அப்பன் வீட்டு சொத்தா..?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்தான், ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என மூத்த நிர்வாகிகள் சிலர் கூறி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பி வருகிறார்கள். அதற்கு அவர் முடியாது என்பதை போலவும் அவர் என்னென்ன செய்தார் என்பதை பட்டியலிட்டும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கலக குரலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே எழுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
‘அ.தி.மு.க. ஒருங்கிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவரை அ.தி.மு.க.வை விட்டு விலக்குங்கள்’ என கே.சி.பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். ஆதரவாளரான மருது அழகுராஜ், தனது வலைதள பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டிருக்கிறார்.
அதாவது சசிகலா பக்கத்தில் எஸ்.பி.வேலுமணியின் புகைப்படத்தை வைத்து அந்த போஸ்டர் இருக்கிறது. ‘ஸ்டார்ட் மியுசிக்…. நான் சொல்லலே… அதே தான்…’ என சூசகமாக பதிவிட்டிருக்கிறார்.
மருது அழகுராஜின் சூசகமாக கூறியிருப்பது என்னவென்றால், ‘அ.தி.மு.க. ஒருங்கிணைப்பதில் எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக இருந்தால், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி முதல்வர் வேட்பாளராக இருப்பார்’ என்பதுதான் அது! அதாவது, எடப்பாடி பழனிசாமியையே முதல்வராக்கியவர் சசிகலாதான் என்பது குறிப்பிடத் தக்கது.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மாஜிக்களும் இணைப்பு அவசியம் என கூறிய நிலையில், அடுத்தது அ.தி.மு.க.வில் என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.