உட்கட்சி துரோகிகள்! உருகிய எடப்பாடி! கடைசி வார்னிங்!

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வில் உதயநிதியை துணை முதல்வராக்கினால் உட்கட்சியில் எதிர்ப்பு எழுமோ..? ‘வாரிசு அரசியல்’ கோஷத்தை எதிர்க்கட்சிகள் எழுப்புமோ என்ற யோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என எடப்பாடிக்கு முக்கிய நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ‘கட்சியில் இருந்து கொண்டே வேட்பாளர்களுக்கு துரோகம் செய்ததை சொல்லி எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டிருக்கிறாராம்.

இப்படி இரண்டு தலைவர்களுக்குமே சவால்களும், நெருக்கடிகளும் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ‘பத்து தோல்வி’ பழனிசாமி என்ற நிலையிலிருந்து ‘ஏறுமுகத்தில்’ எடப்பாடி பழனிசாமி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில்தான், கடந்த ஒரு மாத காலமாகவே, தமிழகம் முழுவதுமுள்ள நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

அப்போது, வரும்தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும், பாமகவை நழுவவிடக்கூடாது என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகள் கருத்து கூறிவருகிறார்களாம். அதேபோல, முக்குலத்தோர் வாக்குகளை பெற, சசிகலா, ஓபிஎஸ் தரப்பு ஆதரவும் தேவை என்று எடுத்து சொல்கிறார்களாம்.

ஆனால், இதை பற்றி எந்த முடிவும் சொல்லாத எடப்பாடி பழனிசாமி, நிச்சயம் வரும் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம் என்று மட்டுமே நம்பிக்கையுடன் சொல்லி வருகிறாராம். தொடர்ந்து 2ம் கட்ட ஆலோசனை கூட்டத்தையும் மேற்கொண்டு வருகிறார். நேற்றுகூட, சென்னை ராயப்பேட்டையில், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் சென்னையின் 3 தொகுதிகளிலுமே அதிமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்தும், குறிப்பாக தென் சென்னையில் டெபாசிட் இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக தெரிகிறது. அதற்கு நிர்வாகிகள், கூட்டணி வலுவாக அமையாதது மற்றும் கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளும் அதிமுகவின் தொடர் சறுக்கலுக்கு காரணம் என்று சொல்லி உள்ளார்கள்.

பிறகு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘‘கட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.. ஒரு வட்டத்துக்கு ஒரு கிளை செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்.. அந்த பதவிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.. சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பணியை தொடங்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியதுடன், ‘‘கட்சி பணி முறையாக செய்யாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்’’ என்று வார்னிங் தந்தாராம்.

ஆனால், நேற்று முன்தினம், சேலம் தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டபோது சில விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டாராம் எடப்பாடி. முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர்கள் வெங்கடாஜலம், இளங்கோவன், வீரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘சேலம் தொகுதியில் நாம் தோற்போம் என்று கனவில் கூட நினைச்சு பார்க்கல.. சிலர் சேலத்தில் எதிராக வேலை பார்த்தார்கள். அவர்கள் எல்லாம் யார் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்…

எந்தந்த இடங்களில் வீக்காக இருக்கிறது என்று மட்டுமே உங்களிடம் அப்போது சொன்னேன்.. அந்தந்த இடங்களில் நீங்களும் கவனம் செலுத்தி இருந்தால், நாம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்… இனிமேலாவது நீங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த இடங்களில் குறைகள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதனை சரிசெய்ய வேண்டும்’’ என உருக்கமாக கேட்டுக் கொண்டாராம் எடப்பாடி பழனிசாமி.

By R Priyu

Related Post