என்றும் வைத்திலிங்கத்தின் விசுவாசி! அதிமுகவில் இணைவது வதந்‘தீ’!

ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி என தனித்தனியாக பிரிந்தது. பிறகு, அதிமுகவை மீட்போம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று இரு தரப்பினரும் தங்களுடைய மோதலை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்ற நிலையில், இறுதியாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். கட்சியும் அவரது வசம் ஆனது.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார். அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன் உள்பட ஒரு சிலர் கைகோர்த்து பயணித்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை சந்தித்தார். அங்கு இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிகழ்வு அவரது அணியில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

அவரது அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஏற்கனவே அங்கிருந்து விலகி விட்டார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று விரைவில் தாய் கழகமான அதிமுக-வில் சேர்ந்து விடுவார் என்று அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த ர.ர.க்களிடம் பேசினோம். ‘‘சார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட மாஜிக்கள் அ.தி.மு.க.வில் இணைய ஏற்கனவே விருப்பத்தில்தான் உள்ளனர். அவர்களது தயக்கத்திற்கு வேறுவொரு காரணமும் இருக்கிறது.

அதாவது, மலைக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தளவில் மா.செ. பதவியை பிடிப்பதில்தான் பலருக்கு மோதல் நிலவுகிறது. இதில் சிலர், ‘குறுக்கு’ வழியில் மா.செ. பதவியை பிடித்துவிடுவதால், ஜெயலலிதா காலத்தில் கட்சியை சிறப்பாக வழிநடத்திய தலைவர்களே தற்போது டம்மியாக இருக்கிறார்கள். வெல்ல மண்டி நடராஜன் ஓ.பி.எஸ். அணியில் இருந்தாலாவது அவருக்கு ஓரளவு மதிப்பிருக்கும். அ.தி.மு.க.வில் இணைந்தால், ஜூனியர் பின்னால் சீனியர் அணிவகுப்பாரா என்ற கேள்வி எழும்’’ என அ.தி.மு.க.வினரே நம்மிடம் பேசியதுதான் அதிர்ச்சியை அளித்தது.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்பினரோ, ‘‘அண்ணன் என்றைக்குமே வைத்திலிங்கத்தின் விசுவாசி. அவர் எங்கு இருக்கிறாரோ அண்ணனும் அங்குதான் இருப்பார். எனவே, எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. இருக்கும்வரை வெல்லமண்டி நடராஜன் செல்லமாட்டார்’’ என அடித்துக் கூறினார்கள்.

By R Priyu

Related Post