உதயநிதி துணை முதல்வரா? Dr. சரவணன் சரமாரி கேள்வி!

‘‘தமிழகத்தை கசக்கி பிழியும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க கூடாது என்று நினைக்கும் மக்கள் எப்படி உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக விரும்புவார்கள்?’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மதுரையில் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கூறியதாவது;

‘‘சென்னை கொளத்தூரில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது ஆனால் பழுக்கவில்லை என்று தனது தவப்புதல்வர் உதயநிதிக்கு துணை முதலமைச்சராக ஆவதற்கு ஆதரவு பெருகி வருவதாக மறைமுகமாக கூறியுள்ளார்.

இதே கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று வாரிசு அரசியல் கிடையாது என்று கூறினார். அதனை தொடர்ந்து ஸ்டாலினை மூலம் வாரிசு அரசியலை விதைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலினும் தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறினார் ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார், அதனை தொடர்ந்து திமுக இளைஞரணி பதவியில் அமர்த்தினார் ,அதனை தொடர்ந்து அமைச்சர் பதவியில் அமர்த்தியது மட்டுமல்லாது, திமுகவில் உழைத்த மூத்த நிர்வாகி இருக்க அவர்களைப் புறந்தள்ளி கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் வகையில் ஒருங்கிணைப்பு குழுவில் மூத்த அமைச்சர்களுடன் உதயநிதியையும் இடம்பெறச் செய்தார்.

இப்படி படிப்படியாக தனக்கு அடுத்தபடியாக உதயநிதியை வளர்த்துவிட்டு, ஏதோ மக்களும், திமுகவினர் எண்ணத்தை நிறைவேற்றது போல ஸ்டாலின் கூறி வருகிறார். தற்போது கூட உதயநிதியை துணை முதலமைச்சராக கோரிக்கை வலுத்துவருவதாக கூறுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் விடியா திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது மக்கள் கவலையுடன் தான் விழிக்கிறார்கள். மூன்று முறை மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் கட்டணம் உயர்வு ,குடிநீர்வரி உயர்வு, குப்பை வரிஉயர்வு, அரிசி முதல் அனைத்து மளிகை பொருள் விலை உயர்வு, கட்டுமான பொருள் உயர்வு என மக்களுக்கு தாங்க முடியாத சுமையை தான் ஸ்டாலின் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளை இல்லை என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது, மக்கள் அச்ச உணர்வுடன் வெளியே செல்கிறார்கள்.

எடப்பாடியார் ஆட்சியில் எந்த விலைவாசி உயர்வும் இல்லை சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். இந்த விடியா திமுக அரசு ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என்று எண்ணும் மக்கள் எப்படி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க மக்கள் விரும்புவார்கள்? உதயநிதி ஸ்டாலின் தமிழகத்திற்கு என்ன சாதித்தார் சென்னையில் கார் பந்தயத்திற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து 42 கோடியை சாலை போட்டார் இதற்கு அனைதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சனாதனம் குறித்து பேசி சர்ச்சை ஈடுபட்டார் தற்போது கூட அந்த வழக்கில் ஜாமீன் பெறும் நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தினார் அந்த மாநாட்டில் நடந்த கூத்தைக் கண்டு மக்களே சிரியாய் சிரித்தனர்.

புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் மாணவ சமுதாயத்திற்கு 52 லட்சம் மடிக்கணியை வழங்கினார்கள், அதைக் கூட அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நிறுத்தி விட்டார்கள் மாணவர்கள் மீது அக்கறை இருக்குமேயானால் அந்தத் திட்டத்தை தனது தந்தையிடம் கூறி வாதாடி பெற்று தந்திருக்கலாமே? இன்றைக்கு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த இளைஞர்களை மீட்க உதயநிதி ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்?

அம்மா ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட்டது, தற்பொழுது திமுக ஆட்சியில் மூன்று செட் சீருடைகள் வழங்கப்பட்டு, நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50% உயர்த்தினார், அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா 69 சதவீதமாக இட ஒதுக்கீட்டை உயர்த்தி ஒன்பதாவது அரசியல் அட்டவணையில் சேர்த்தார், கடந்த 2020 ஆம் ஆண்டு புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையான அம்மாவின் அரசு அருந்ததியினருக்கான மூன்று சகவீத உள் இட ஒதுக்கீடு கிடைக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடினார் தற்போது அந்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்றைக்கு ஒட்டுமொத்த மக்களும் விரும்பாத ஆட்சியைத்தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மன்னராட்சி மக்கள் விரும்பவில்லை, எடப்பாடியார் தலைமையிலான நடைபெறும் மக்களாட்சியை தான் விரும்புகிறார்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும்’’ என கூறினார்.

By R Priyu

Related Post