தமிழக அரசியல் கட்சிகளில் அடுத்த வாரிசுகள் கட்சியை முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாகிவிட்டனர். தி.மு.க.வைப் பொறுத்தளவில் உதயநிதி ஸ்டாலின், ம.தி.மு.க.வை வழிநடத்தும் துரை வைகோ, பா.ம.க.வை வழிநடத்தும் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க.வில் இளந்தலைவர் அண்ணாமலை, புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்!
இப்படி தமிழக அரசியல் களத்தில் அடுத்த வாரிசுகள் வரிசைக் கட்டத் தயாராகியதோடு, களத்தில் இறங்கி அரசியல் ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டனர்.
இந்த வரிசையில், ‘அ.தி.மு.க.வை முன்னெடுக்கப் போகும் அடுத்த தலைமுறை தலைமை யார்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ.
அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்கவேண்டும் என தொடர்ந்து கவிதை வடிவிலும், கட்டுரை வடிவிலும் எழுதி வருபவர்தான் மருது அழகு ராஜ். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, பொதுக்கூட்டங்களில் அவர் சொல்லும் குட்டிக் கதைகளுக்கு சொந்தக்காரர் மருது அழகுராஜ்தான்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘எடப்பாடியின் சபதம்..!’’ சபதம் என்ற தலைப்பில்,
‘‘ஒற்றுமை என்பது அவசியமில்லை … சரி..
ஓ பி.எஸ் தினகரன் சசிகலா மூவரையும் சேர்க்க கூடாது.. சரி…
பாஜக வுடன் கூட்டணி இல்லை சரி…
மன்சூர் அலிகான் கட்சி தமிழ்நாடு
மதுக் குடிப்போர் சங்கம்…
ரியல் எஸ்டேட் மற்றும் தமிழ்நாடு நிலத் தரகர்கள் சங்கம் போன்ற மாபெரும் அமைப்புகளை கொண்டு ஒரு மெகா கூட்டணி அமைப்பேன் சரி…
2026-ல் திமுக வை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிட்டு கொடநாடு கேசோடு சேர்த்து கட்சியையும் மூடிப்புட்டு
அடிச்சு வச்சிருக்கும் பல லட்சம் கோடிகளோடு அமைதியாயிடுவேன்.. அம்புட்டுத் தான் என்ன நாஞ் சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.
மருது அழகுராஜின் வாதத்தை படிக்காத பாமரனும் மறுக்க முடியாது. காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி அமைந்திருந்தால் 25 இடங்களுக்கு மேல் இக்கூட்டணி வென்றிருக்கும் என்பது அந்த பாமரனுக்கும் தெரியும்…
ஆனால், சம்பந்தமே இல்லாமல் பி.ஜே.பி. எதிர்ப்பை கையில் எடுத்தார். மத்தியில் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களில் ஒருவரை மாநிலக் கட்சி ஆதரிக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆற்றில் ஒருகால்… சேற்றில் ஒருகால்… வைத்து அ.தி.மு.க.வை படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டார்.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வை முன்னெடுக்கப்போகும் அடுத்த தலைமுறை யார்? என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வின் அடுத்த வாரிசு யார் என கைகாட்டவில்லை… அதே போல்தான் எம்.ஜி.ஆரும்… ‘திறமை உள்ளவர்கள் தலைமை பொறுப்பேற்கட்டும்…’ என விட்டுவிட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியை சசிகலா தலைமை பொறுப்பில் அமரவைத்தார். அவர் சாமர்த்தியத்தால் வரவில்லை என்பதுதான் நிஜம்… இந்த நிலையில்தான் கொங்கு மண்டத்தில் இருந்தே அ.தி.மு.க. தலைமை வெகுவிரைவில் வெகுண்டெழும் என்கிறார்கள்… அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் சிலரே..!
பொறுத்திருந்து பார்ப்போம்..!