ஆன்லைன் டிரான்பரில் முறைகேடு? அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

தமிழகம் முழுவதிலும் வனத்துறையில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் இடமாறுதலில் பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் நடுநிலையான அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தைப் பொறுத்தளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஸிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஐ.எஃப்.எஸ்.ஸிற்கு கொடுப்பதில்லை. காரணம், ஆட்சி, நிர்வாகம் மற்றும் சட்டம் & ஒழுங்கை இரு அதிகாரிகளும் முக்கிய பங்கு வகிப்பதாக நினைத்து இருதுறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதனால் வனத்துறையில் மறைமுகமாக பல்வேறு தவறுகள் நடப்பதாக அதிகாரிகள் வட்டாரத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிக் கல்வித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை என அனைத்திலும் கவுன்சிலிங் முறையில்தான் இடமாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வனத்துறையில் மட்டும் ‘ஆன்லைனில்’ இடமாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது.

வனத்துறையில் நடக்கும் ஆன்லைன் இடமாறுதலில் லட்சக்கணக்கில் கைமாறுவதாகவும், யார் ‘கொடுக்கிறார்களோ’ அவர்களுக்கு கேட்ட இடம் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால், வனத்துறையில் அலுவலக உதவியாளர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட இடமாறுதலை எதிர்த்து பலர் மதுரை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கின்றனர். இந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தும், பலருக்கு மீண்டும் அதே இடத்தில்பணிபுரிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சம்பளம் வாங்காமலேயே நான்கைந்து மாதங்கள், குடும்பத்தை நடத்த முடியாமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

சென்னை வேளச்சேரியில் நேற்று அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆன்லைன் டிரான்ஸ்பர் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அமைச்சர் விளக்கம் கேட்டதோடு இல்லாமல், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணிபுரிய உடனடியாக வாய்ப்பு வழங்க வேண்டும். தவிர, வனத்துறையில் இடமாறுதல் உள்பட பல்வேறு விஷயங்களில் நடக்கும் குளறுபடிகளை அமைச்சர் நேரில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வனத்துறை பக்கம் தனது பார்வையை திருப்புவாரா..?

By R Priyu

Related Post