தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளிலும் (தி.மு.க., அ.தி.மு.க.) இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கழகத்தினர்.
குறிப்பாக அ.தி.மு.க.வில் இரண்டு தொகுதி ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. காரணம், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர்கள் பலர் தோல்வியடைய மா.செ.க்களே காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்களுக்கு, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எடப்பாடி வாய்ப்பு வழங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அ.தி.மு.க.வில் மா.செ. மாற்றம் அல்லது மா.செ. விரிவாக்கம் செய்யாமல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டால், மீண்டும் தோல்வியைத் தழுவிடுவோம். எனவே, மா.செ. மாற்றம் நடந்தால்தான் தேர்தலில் சிலர் போட்டியிடவே முன்வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம்¢ பேசினோம். ‘‘சார், தி.மு.க. ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி இருந்தும், அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. காரணம், கூட்டணி பலம் இல்லை என்றாலும், மா.செ.க்களே உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதும் ஒரு காரணம்.
மலைக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் மா.செ. ஒருவரே கட்சிப் பணத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டார். ‘தூங்கா நகரில்’ யாரும் போட்டியிட முன்வராத நிலையிலும், மா.செ.வே மருத்துவரை நோயாளியாக்கிவிட்டார். கோவையில் ‘வந்தேண்டா பால்காரேன்…’ என்ற பாடலின் படத்திற்கு வேலை செய்துவிட்டார் மா.செ.! ஒரு சில மாவட்டங்களைத் தவிர, மற்ற இடங்களில் ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் நடந்தன.
எனவே, எடப்பாடி பழனிசாமி கட்சியை இணைப்பதில் ஆர்வம் கட்டாவிட்டாலும் சரி, கட்சிக்கு துரோகம் செய்த மா.செ.க்களை மாற்றி மா.செ.க்கள் விரிவாக்கம் செய்தால்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே முன்வருவார்கள்’’ என்ற அதிர்ச்சித் தகவலை சொன்னார்கள்!
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி..!