மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்க்கட்சியினரே ‘இரும்புப் பெண்மணி’ என போற்றியதுண்டு. எம்.ஜி-.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க.வை எஃகு கோட்டையாக வழிநடத்தி வந்தவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. சுக்கு நூறாக உடைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ‘அணிகள் இணையவேண்டும்’ என வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் மருது அழகுராஜ்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான மருது அழகுராஜ் ‘அம்மாவின்’ நினைவுகளை அவ்வப்போது அசைப்போட்டு வருபவர். இந்த நிலையில்தான் தனது பழைய நினைவுகளை வலைதளங்களில் பகிரிந்திருக்கிறார்.
‘‘விருதும் மருதும்’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ்,
‘‘கோடிச் சிங்கத்தின் தைரியம் கொண்ட வீரத்திருமகளின் அரசியல் உரைகளை தயாரிக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து..
விண்முட்ட வந்தாலும் விழிசிமிட்டா அந்த வெற்றித் திருமகள் தன் பொற்கரங்களால் தொட்டுத் தொடங்கிய நமது எம்.ஜி. ஆர் நாழிதழுக்கு ஆசிரியராகவும்…
அதைத் தொடர்ந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ்ஸின் நிர்வாக இயக்குனராகவும்…
ஒப்பில்லா தலைவியால் ஒப்பளிக்கப்பட்ட கடமைகளை செய்து வந்த எளியவன் எனக்கு 2014 -ம் ஆண்டின் தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான உ.வே.சா விருதுக்கு என் பெயரை அம்மா அவர்களே பரிந்துரை செய்ததும்…
தலைமைச் செயலகத்தில் நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் மகராசியின் கரங்களால் இந்த மருதுவுக்கு தங்கப்பதக்கமும் ரொக்கமும் விருதும் தந்து மனதார பாராட்டியதும் எனது வாழ்நாள் பாக்கியமாகும்…
ஆம் அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்து கலந்து கொண்ட தமிழறிஞர்களுக்கான கடைசி விருதளிப்பு நிகழ்வு அது தான் என்பது வரலாறாகிப் போனது…
ஆம்#ஆச்சரியங்களை பார்க்கும் போதெல்லாம் “அம்மா” என விளிப்போம்..
ஆனால் நம் “அம்மாவே ஓர் ஆச்சரியம் தானே…!’’ என தனது பழைய நினைவுகளை பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்..!