தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட இப்போதே சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். அதே சமயம், அ.தி.மு.க.வில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே முக்கிய புள்ளிகள் போட்டியிட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் தேர்தல் களத்தில் தே.மு.தி.க. அரம்பிக்கப்பட்ட போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் விஜயகாந்த். அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். அ.தி.மு.க.விலிருந்து பலர் விஜய் கட்சிக்கு செல்வதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காதவர் நடிகர் விஜய் கட்சியில் இணைந்து போட்டியிடவும் தற்போதே முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, அ.தி.மு.க.வில் கடைநிலை தொண்டர்களையும் சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்கி அழகு பார்ப்பார் ஜெயலலிதா. ஜெயலலிதா யாரை அறிவிக்கிறாரோ அந்த வேட்பாளரை மா.செ. வெற்றியடைச் செய்வார்… செய்ய வேண்டும். அது நடக்காவிட்டார் உடனடியாக மா.செ. மாற்றப்படுவார். ஆனால், தற்போதைய எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் அந்த நிலை இல்லாததால்தான் தற்போது போட்டியிடவே சிலர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இது பற்றி ‘தமிழக அரசியல்’ பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தி.மு.க.வைப் பொறுத்தளவில் 200 தொகுதிகளை டார்கெட் வைத்து இப்போதே அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி தலைமையிலான குழு, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சாதனையை படைக்க வேண்டும் என தீயாக வேலை பார்த்து வருகின்றனர். தி.மு.க.வைப் பொறுத்தளவில் இந்த முறை இப்போதே பலர் போட்டியிட காய்நகர்த்தி வருகின்றனர். இளைஞர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எடப்பாடியால் வலுவான கூட்டணியையும் அமைக்க முடியவில்லை. பிரிந்தவர்களை இணைக்கவும் முயற்சிக்கவில்லை. இதனால், அ.தி.மு.க.வில் போட்டியிட ‘மாஜி’க்களே தயக்கம் காட்டி வருகிறார்களாம்.
காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களிடமே ‘விட்டமினை’ வாங்கி, வாக்களர்களுக்குக் கூட கொடுக்கவில்லை. ‘பூத் கமிட்டி’ மட்டும் கொடுத்தார்கள். இதனால் பல வேட்பாளர்கள் இன்றைக்கு கடனாளியாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நிலை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதால் ‘மாஜி’க்கள் தயக்கம் காட்டி வருகிறார்களாம்’’ என்றனர்.
இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் நெருக்கத்தில் யார் தள்ளாடுகிறார்கள், யார் துள்ளிவிளையாடுகிறார்கள் என்பதை பார்ப்போம்!