விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல்கள்தான், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில்தான் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் தி.மு.க.விற்கு சவலாக இருக்கும்’ என ஓபனாக பேசிவிட்டு, அதன் பிறகு மறுப்பும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்’’ என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வரும் திருமாவளவன் கூறியிருப்பது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுக வரலாம். எந்த கட்சியாக இருந்தாலும் வரலாம் என்று திருமா ஓபன் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களுக்கு கடும் சந்தேகத்தை கிளப்பியது.

அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இலவசங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, மது ஒழிப்பு திட்டங்களை கொண்டு வரலாம். மது ஒழிப்பு, மது விலக்கு கொண்டு வந்தால் போதும். அந்த நிதி இலவசங்களை கொடுக்க வேண்டியது இல்லை என்றார்.

அரசுக்கு வருவாய் கொடுக்கும் முக்கிய துறையாக டாஸ்மாக் இருக்கிறது. அதன் மீது கை வைத்தால் தான் ஸ்டாலினுக்கு சுர்ரென கோபம் வரும். அதனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து விடுதலை சிறுத்தைகள் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினால் அது திமுக கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் என எடப்பாடிக்கு ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. அதனை திருமாவுக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறார் எடப்பாடி.

அதனையொட்டிதான், மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டார் திருமா என்கிற தகவலும், தற்போது மாநாட்டுக்கு அதிமுகவை அழைக்க வேண்டும் என்கிற யோசனையும் அதிமுக தரப்பிலிருந்தே சொல்லப்பாட்டிருக்கிறது. திருமா அதற்கு தலையாட்டுகிறார் என்கிற தகவலும் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டிருக்கிறது.

திருமாவின் அழைப்பில் அதிமுகவின் பின்னணியும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதுபோல, அதிமுக ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘‘அழைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டியது கட்சியின் தலைமை தான். ஆனால் விடுதலை சிறுத்தைகள் முன்னெடுத்துள்ளது நல்ல விஷயம். அதுவும் கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மது விலக்கு என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. இதற்காக கருப்பு சட்டையும், பதாகைகளும் ஏந்தி போராடியதை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதை தவறவிட்டு விட்டனர். இதை திருமாவளவன் சுட்டிக் காட்டுவது நல்ல விஷயமாக பார்க்கிறோம்’’என்று திமுகவுக்கு கடுப்பை ஏற்றும் வகையில் பதிலளித்திருக்கிறார்.

இந்த நிலையில், திருமாவின் மாநாட்டில் அதிமுக சீனியர்களில் ஒருவரை அனுப்பி வைக்க எடப்பாடி முடிவு எடுத்து விட்டாராம். யாரை அனுப்பி வைப்பது என்பதை சீனியர்களிடம் கலந்தாலோசிக்க இருக்கிறார் எடப்பாடி. மாநாட்டுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், இந்த மாத இறுதியில் முடிவெடுக்க இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் விரைவில் ‘சிக்கலை’ ஏற்படுத்த இருக்கிறதாம். அதற்கான வியூகத்தை ‘சுனில்’ பார்த்து வருகிறாராம்..!

By R Priyu

Related Post