அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினை குறிக்கும் வகையில், குட்டிக்கதை ஒன்றை கூறி, அறப்போர் இயக்கம் மிக கடுமையான பதிவினை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில் மக்கள் மீது துளியும் அக்கறை இன்றி மீண்டும் அதே இரு துறைகளை அமைச்சருக்கு முதல்வர் தூக்கி கொடுத்திருப்பதாகவும், அவரை தியாகி என்று அழைத்திருப்பதாகவும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஒரு ஊரில் ஒரு அமைச்சர் மக்களிடமிருந்து திருடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இவரால் நேரடியாக பாதிக்கப்பட்டனர். இந்த அமைச்சரின் லஞ்ச ஊழலை எதிர்த்து ராஜாவிற்கு எதிரான மானஸ்தர் ஒருவர் கோஷமிட்டார். அமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்றார். தான் அரசன் ஆனால் சும்மா விட மாட்டேன் என்றார்.
அரசனை வீழ்த்தி மானஸ்தர் ராஜா ஆகிவிடுவார் என்று உணர்ந்த அந்த அமைச்சர் தான் கொள்ளையடித்ததில் ஒரு பங்கை மானஸ்திரிடம் வழங்கி அவர் பக்கம் சேர்ந்தார். மானஸ்தர் அரசரை வீழ்த்தினார். மானஸ்தர் அரசனானார். அந்த லஞ்ச ஊழல் அமைச்சருக்கு தன் சமஸ்தானத்தில் முக்கிய இரண்டு அமைச்சரவையை ஒதுக்கினார்.
லஞ்ச ஊழலில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளிய அவருக்கு வெளிச்சம் கொடுக்கும் அமைச்சரவையும் மக்களை ஏழ்மையிலேயே வைத்திருக்க சாராய அமைச்சரவையையும் வழங்கினார். அவர் மக்களை மேலும் மேலும் கொள்ளையடித்து மாதா மாதம் மானஸ்தர் அரசரின் மருமகனுக்கு கப்பம் கட்டினார். எந்த அமைச்சரும் கட்டாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் மக்களைக் கொள்ளை அடித்து கப்பம் கட்டும் அமைச்சரை பார்த்து அரசரின் குடும்பமே குதூகலமானது.
சிற்றரசுகள் அடங்கிய பேரரசின் துறை ஒன்று அமைச்சரை செய்த லஞ்ச ஊழலுக்காக சிறை பிடித்தது. மற்ற அமைச்சர்கள் கப்பம் கட்டினாலும் இவர் அளவுக்கு கப்பம் கட்டுபவர் யாரும் இல்லை என்று ஒரு வருடமாக வாடி இருந்தார் மானஸ்தர். பிணையில் வெளியே வந்தார் அமைச்சர். மக்களை கொள்ளை அடித்து சிறை சென்றவரை மானஸ்தர் தியாகி என்றார்.
மக்கள் மீது துளியும் அக்கறை இன்றி மீண்டும் அதே இரு துறைகளை அமைச்சருக்கு கொடுத்தார். பல வருடங்களுக்கு முன்பு மானஸ்தரின் அந்த பேச்சு மக்களின் நினைவுக்கு வந்தது. அந்த மானஸ்தர் எங்கே போனார் என்று மக்கள் தேடி வருகின்றனர்! அவர் மானஸ்தர் அல்ல கொள்ளை கூட்டத்தின் தலைவர் என்பதை மக்கள் உணரும் நாள் என்றோ?” இவ்வாறு அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் கடுமையான பதிவினை வெளியிட்டுள்ளார்.