விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்ற அறிவிப்பு என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.விற்கு சாதகமாக மாறியிருக்கிறது என அரசியல் பார்வையாளர்களை தாண்டி, ரத்தத்தின் ரத்தங்களே குமுறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 4வது பெரிய தனி கட்சியாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் ஸ்வீப் செய்த ஒரே மாநில கட்சி திமுகதான்.
இந்த நிலையில் திமுகவிற்கு அடுத்த டெஸ்ட்டாக விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் இன்றொரு நடைமுறைக்கு வருகின்றன. அடுத்த 1 மாதம் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி திமுகவிற்கு எதிராக போட்டியிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது போக இங்கே நாம் தமிழர் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற அதிமுகவின் நிலைப்பாடு, அக்கட்சியை மேலும் வலுவிழக்கவே செய்யும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. இது ஜெயலலிதா எடுக்காத அரசியல் முடிவு.
முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். ஆனால் அவர் புறக்கணித்த போது, மூன்றாவது அணி எதிர்திசையில் இல்லை. அப்போது என்டிஏ கூட்டணி பெரிதாக இல்லை. பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் வேறு.
திமுகவிற்கு எதிர்கட்சி அதிமுக தான் என நிரூபிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அதிமுக இழந்திருக்கிறது. இந்த இடத்தை பாஜகவிற்கு அள்ளிக் கொடுத்துள்ளது. பாஜக கூட்டணி ‘எதிர்கட்சி’ என்ற சான்சை அதிமுகவே உருவாக்கி கொடுத்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல
என்பதை அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். “அராஜகம் என்றால் திமுக… திமுக என்றால் அராஜகம்”. திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள்.
அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்று கூறி உள்ளது அதிமுக.
சமீபத்தில்தான் ‘நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் படிப்பினையை கொடுத்திருக்கிறது’ என்றார் எடப்பாடி பழனிசாமி. அந்த படிப்பினையை உணர்ந்தால், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் வீறுநடைபோடும். இல்லாவிட்டால் அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!