சசிகலா ரீ என்ட்ரி! அதிமுகவின் எதிர்காலம்? மூத்த நிர்வாகி சூசகம்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், அ.தி.மு.க. தொண்டர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் சசிகலா ‘ரீ என்ட்ரி’ பேட்டி அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இந்தியாவில் 3வது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன்.

எனக்கு இந்த ஊரு, இந்த சாதி என்பது தெரியாது. மறைந்த முன்னாள் முதல்மைச்சர் ஜெயலலிதா அவர்களும் சாதி பார்ப்பவர் இல்லை. அப்படி பார்த்திருந்தால் அவரின் தோழியாக நான் இருந்திருக்க முடியாது. ஆனால் தற்போது அதிமுகவில் சாதி அரசியல் செய்கிறார்கள். அவர்கள் தனியாக சாதி இயக்கத்தை உருவாக்கி சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதிமுகவிலிருந்து செய்வதை ஏற்க முடியாது.

நான் சாதி என நினைத்திருந்தால் அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பேனா? அப்படி நான் நினைக்கவில்லை. திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. தொண்டர்கள் உழைப்பார்கள் பதவி வாரிசுக்கு போகும். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. தொண்டரும், தலைவர் ஆகலாம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக் கூடாது.

2026ஆம் ஆண்டு தனிப் பெரும்பான்மை சக்தியுடன் அம்மாவின் ஆட்சி அமையும். தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன். திமுகவின் பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க நாம் வந்தே ஆக வேண்டும். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பது தவறானது. அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்ட்ரி ஆரம்பம் ஆகிவிட்டது.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. திமுக ஆட்சியில் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. புதிய பேருந்துகள் வாங்கமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடநாடு வழக்கை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகிறார்கள். கோடநாடு விசாரணையை ஏன் இவ்வளவு பொறுமையாக நடத்த வேண்டும். திமுக அரசால் கோடநாடு விசாரணையை கூட வேகமாக நடத்த முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

சசிகலாவின் இந்தப் போட்டி குறித்து மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், எடுத்த எடுப்பிலேயே ‘‘தம்பி எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. என்ற இயக்கம் தொடர்ந்தால், 2026லும் தி.மு.க. எளிதாக ஆட்சி அமைத்துவிடும். தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துவிடும். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி காரணமாகிவிடுவார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. நிலைமையே கேள்விக்குறியாகிவிடும்’’ என்றவர், கொஞ்சம் தேநீர் அருந்திவிட்டு அடுத்து சொன்ன விஷயங்கள்தான் அதிர்ச்சி ரகம்.

அதாவது, ‘‘தம்பி, இன்றைக்கு அந்தம்மா (சசிகலா) இல்லைன்னா எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியையும் வகித்திருக்க மாட்டார். அ.தி.மு.க.விற்கு தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருக்கமாட்டார்.

காரணம், எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியையும், எடப்பாடி பழனிசாமியையும் முதல்வராக்கிவிட்டு அந்தம்மா சிறைக்கு சென்றார் என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கொஞ்சம் நிதானம் தவறியிருந்திருந்தால், ஜெ. மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சி கலைந்திருக்கும். அதைத்தான் ஓ.பி.எஸ். உட்பட தி.மு.க.வினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சரி, அந்தம்மா சிறைக்கு சென்ற பிறகு அ.தி.மு.க.வை தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. அது அவருடைய சாதுர்யம் என்று வைத்துக்கொண்டாலும், அந்தக் கட்சியை தோல்வியிலிருந்து மீண்டுடெழுந்து கொண்டு வந்திருக்கனுமா இல்லையா? தொடர்ச்சியாக பத்தாவது முறையாக தோல்வியைத் தழுவிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணிக்கும் நிலைமைக்கு இன்று எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டு விட்டார்.

இதற்கெல்லாம் காரணம், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் தவறான முடிவுதான். நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டமன்றத் தேர்தலிலும் சரி யாருக்காவது சீட்டு வேண்டும் என்றால் ஆத்தூர் இளங்கோவனை, அவரது முசிறி கல்லூரிக்கு சென்று சந்தித்து ‘சி’க்களை கொடுத்தால் சீட்டு வாங்கிவிடலாம், அதே போல்தான் கட்சியில் பதவியும் வாங்கிவிடலாம் என்ற நிலை ஜெயலலிதாவின் மறைவிக்குப் பிறகும் தொடர்வதால்தான், தோல்விகளும் தொடர்கிறது.

எனவே, மீண்டும் அந்தம்மா தலைமையின் கீழ், டி.டி.வி.யின் அ.ம.மு.க. கலைக்கப்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாத நிலை ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்’’ என்று அடித்துக் கூறினார்.

அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை பதவி சுகத்திற்காக வீணடிப்பவர்கள் யோசித்தால், அடிமட்டத் தொண்டர்கள் வாழ்வில் வசந்தகாலம்… இல்லையேல் எதிர்காலமே இருக்காது..!

By R Priyu

Related Post