திருமங்கலம் ஃபார்முலா! திமுகக்கு அதிமுக ஐ.டி.விங் பதிலடி..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கான காரணங்களை தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஆர்.பாரதி அடுக்கினார். இந்த நிலையில்தான் ராஜ் சத்தியன் தலைமையிலான அ.தி.மு.க. ஐ.டி.விங் ஆர்.பாரதிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது எனக் குற்றம்சாட்டி, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘இந்தியாவிலேயே தமிழகத்தில் ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை கொண்டு வந்ததே அதிமுக தான். 1992ல் பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அறிமுகப்படுத்தியது அதிமுக தான்.

ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்களில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுகளை அதிமுக.,வினர் போட்டனர். இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான், தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுக நடத்திய ‘பூத் கேப்சரிங்’ விஷயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு திமுகவை சாக்கு சொல்லக்கூடாது.

இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் அதிமுக பிதற்றுகிறது. இபிஎஸ், தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஓட்டளிக்க மாட்டார்களா? ஓட்டுப்போட வேண்டாம் என கட்சிக்காரர்களை கேட்டுக்கொள்ளும் தைரியம் இபிஎஸ்.,க்கு உள்ளதா?

அதிமுக.,வில் யார் யாரெல்லாம் ஓட்டளிக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்க உள்ளோம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தான் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். நாங்கள் வலுவாக உள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் எக்ஸ் பதிவில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அஇஅதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையான வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தும் அறிவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ்.பாரதி, டெபாசிட் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. எவ்வித இடையூறுமின்றி இடைத்தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பது திமுக தான் என்பதை நாடறியும். அதை 2026 சொல்லும்!

திருமங்கலம் முதல் ஈரோடு கிழக்கு வரை பல்வேறு பார்முலாக்களை வகுத்த ஊழல் விஞ்ஞானிகளான திமுகவினர், வாக்குச்சாவடி கைப்பற்றுவது பற்றி பேசுவதா? அண்டர் டீலிங், பேக்கரி டீலிங் எல்லாம் உங்கள் அறிவாலய வழக்கமாக இருக்கலாம். அதிமுக என்றன்றைக்கும் நேர்மையாக செயல்படும் நெஞ்சுரத்துடன் மக்களை சந்திக்கும் இயக்கம்!’’ என பதிலடி கொடுத்துள்ளனர்.

கலைஞர், ஜெயலலிதா காலத்திலேயே எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த வரலாறு உண்டு..!

By R Priyu

Related Post