வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நடிகர் விஜய்க்கும், அண்ணாமலைக்கும் தான் போட்டி களமாக இருக்கும் என கணித்திருக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்!
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது” என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் தி.மு.க., அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கங்கள் இருக்கும் போது, அரசியல் களம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலைக்கும் இடையேயான போட்டியாக எப்படி இருக்கும் என்பது பற்றி அரசியல் நிபுணர்களிடம் பேசினோம்.
‘‘சார், அ.தி.மு.க. என்ற இயக்கம் சசிகலா தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்தால் அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். அப்படி இல்லையென்றால், அ.தி.மு.க. சிதறியிருக்கும் நிலையில் அக்கட்சிக்கு எதிர்காலம் கிடையாது.
அதே சமயம், தி.மு.க.வில் பல அமைச்சர்கள் மீது தலைக்கு மேல் கத்தியாக சொத்துக் குவிப்பு வழக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்தில் அந்த வழக்கில் சிக்கி அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி.
மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது. வாரிசு அரசியலுக்கும், ஊழலுக்கும் எதிராக ‘போர்’ தொடுப்போம் என்று மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி சபதம் ஏற்றிருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பல இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு, அக்கட்சியின் வாக்கு வங்கியும் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ‘படிப்பினையை’ கற்றுக்கொண்டேன் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதில் அதிக விருப்பம் காட்டவில்லை. ஐந்தாண்டு காலம் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகளை அ.தி.மு.க.வால் அப்படியே பெற முடியாது.
இந்த நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.விற்கும்தான் போட்டி களமாக இருக்கும் என்பது நாட்கள் நகர நகர தெரியவரும்’’ என்றனர்.