அதிமுக தேர்தல் புறக்கணிப்பு! நடிகை கஸ்தூரி வேதனை..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கூறியுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, நாம் தமிழர் கட்சி, பாமக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆனால் அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘அராஜகம் என்றால் திமுக… திமுக என்றால் அராஜகம்…’ திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. ‘ எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி’ என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, எப்போதுமே தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வந்தால் வரலாற்றுப்பூர்வமாக பார்த்தால் ஆளுங்கட்சிக்கு சார்பான ரிசல்ட் தான் வரும் என கூறியுள்ளார்.

அதில் யார் போட்டியிட்டாலும், எவ்வளவு வேலை செய்தாலும் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் வரும் என்று கூறிய அவர், ஒருவேளை அதை மனதில் வைத்துக்கொண்டு அதிமுக இப்படி அறிவித்திருக்கிறார்களா என தெரியவில்லை என்றும் கூறினார்.மேலும் தன்னைப் பொறுத்தவரை ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது என்றும் அதை நாம் ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வாக எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய கட்சியான அதிமுகவே தேர்தலை புறக்கணிப்பதை தன்னால் ஏற்க முடியவில்லை என்றும் கூறினார்.

தொண்டர்கள் மட்டுமல்ல தன்னைப் போன்ற ஜெயலலிதா விசுவாசிகளுக்கும் இது வருத்தமாக உள்ளது என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் தன்னைப் போன்றவர்களின் கருத்து என்ற கஸ்தூரி, அதிமுக ஒதுங்கிப்போவதன் மூலமாக பாஜக மட்டும் தான் திமுகவிற்கு எதிரான ஒரு கட்சி என்ற ஒரு பிம்பம் உருவாகிறது என்றார்.

By R Priyu

Related Post