‘‘அரசியலுக்கு செல்ல வேண்டாம் என நான் கூறியதை கெஜ்ரிவால் மனதில் ஏற்றவில்லை’’என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவின் ரேலகான் ஸித்தி நகரை சேர்ந்தவர் அன்னா ஹசாரே. கடந்த 2011ம் ஆண்டு இவரது இயக்கத்தில் கெஜ்ரிவால் இணைந்தார். அந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்திலும் கெஜ்ரிவால் பங்கேற்றார். இதன் பிறகே, அவர் ஆம் ஆத்மி கட்சியை துவங்கி டில்லி முதல்வர் பதவியை பிடித்தார்.
இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் அறிவித்து உள்ளது குறித்து அன்னா ஹசாரே கூறியதாவது: ‘‘அரசியலுக்கு செல்ல வேண்டாம் என கெஜ்ரிவாலை பல முறை அறிவுறுத்தினேன். சமூகத்திற்கு சேவை செய்யுங்கள். நீங்கள் பெரிய மனிதர் ஆகலாம் என்றேன். நாங்கள் இருவரும் பல ஆண்டுகள் இணைந்து பல பணிகளை செய்துள்ளோம். அப்போதெல்லாம் சமூகப்பணி தான் மகிழ்ச்சியை அளிக்கும் என்றெல்லாம் அறிவுரை வழங்கினேன்.
ஆனால், எனது வார்த்தையை அவர் மனதில் ஏற்றவில்லை. இன்று என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துள்ளது. அவர் மனதில் உள்ளது என்ன என்பது எனக்கு எப்படி தெரியும்’’ இவ்வாறு அவர் கூறினார்.