சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை!

‘‘மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என சசிகலா நினைத்தால் ஜானகி அறிக்கை விட்டது போல அவரும் அறிக்கை விட வேண்டும்’’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதுதான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கே பார்த்தாலும் கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடந்தவண்ணம் இருக்கிறது. விடியா திமுக அரசு இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தினால் இன்றைக்கு சட்ட ஒழுங்கு படுபாதாளத்திற்கு சென்று விட்டது.கல்வி செல்வத்தை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஸி. ஷி. பாரதி அவர்கள். வயது முதிர்வின் காரணமாக இதுபோன்ற கருத்துகளை தெரிவித்திருப்பார் என நினைக்கிறேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று திருமதி சசிகலா அவர்கள் மனதார,உளமார நினைத்தால் திருமதி ஜானகி அம்மையார் கட்சி பிளவுபட்ட போது அறிக்கை விட்டது போல இவர்களும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஜெயலலிதாதான் அதிமுகவை இனி ஏற்று நடத்துவார், அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஜானகி அம்மையார் அறிக்கை வெளியிட்டதைப்போல, நற்பண்புடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலாவும் செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர்.

அண்ணா திமுக கட்சிக்கென்று விதிமுறைகள் உண்டு. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் தான் ஒரு சிலர் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது. அண்ணாமலை போன்ற தலைவர்கள் பாஜகவில் மாநில தலைவராக இருப்பதால் தான் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதாக சொன்ன கட்சி இன்று கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்ணாமலை மெத்தப்படித்தவர்; மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போல ஒரு மாயதோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்.

தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு திட்டத்தையும் பெற்று தராமல் வாயிலே வடை சுட்டு கொண்டிருக்கிறார் அண்ணாமலை. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பதை நாடே அறியும். ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியும். தமிழ்நாட்டில் பாஜக எங்கே வளர்ந்துள்ளது?. 0.52 சதவீதம் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் இப்போதைய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் அண்ணாமலை குறைவான வாக்குகளை பெற்றார். கடந்த தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனக்கூறித்தான் கோவை மக்களின் வாக்குகளை அண்ணாமலை பெற்றார்” என்றார்.

By R Priyu

Related Post