கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது.

‘தமிழக முதல்வர் பதவி விலகவேண்டும்’ என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேலும் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் எம்.பி.யும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான ப.குமார் எம்.பி. அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார்.
இது தொடர்பாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார் அறிக்கையில்,
‘‘மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…
தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, கையாலாகாத விடியா திமுக அரசை கண்டித்தும்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர்ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் (24.6.2024, திங்கட்கிழமை) காலை 10மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
திருச்சியில் தி.மு.க.விற்கு எதிராக நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள்.