அ.தி.மு.க.வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துக்களை கூறினாலும், எடப்பாடி பழனிசாமி என்னவோ மௌனமாகத்தான் இருந்து வருகிறார்.
ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஜே.சி.டி. பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் விலகிய நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கு வலதுகரமாக விளங்கிய தஞ்சை வைத்திலிங்கம் எடப்பாடி பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி டெல்டா பகுதியில் வைத்திலிங்கத்திற்கு நெருக்கமாக இருக்கும் ர.ர.க்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது…
‘‘சார், கடந்த 2011ல் அ.தி.மு.க. ஆட்சி அமைத்த போது நால்வர் அணியில் ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் வைத்திலிங்கம் இருந்தார். 2016 சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் ஓ-.பி.எஸ்.ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு அம்மாவின் குட்புக்கில் இடம்பிடித்தார் வைத்திலிங்கம். அதாவது, அம்மாவிற்கு அடுத்தபடியாகவே இருந்தார். செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கூட பறிக்கப்பட்டு விட்டது.
வைத்திலிங்கத்தால் (என்.ஆர்.சிவபதி, செந்தில் பாலாஜி) அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவியையும் இழந்தவர்கள் பலர். அந்தளவிற்கு ஜெயலலிதாவிற்கு நெருக்கமானார். 2016 சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கத்தை தோற்கடிக்க தென்மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரும், அருகாமையில் உள்ள மாவட்ட அமைச்சர் என மூவரும் சேர்ந்து தேர்தலில் உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்தனர்.
இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியவர உடனடியாக ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்து வைத்திலிங்கத்தை கௌரவப்படுத்தினார். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் அம்மா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அப்போது டெல்டா மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணி கோலோச்சினார். இது வைத்திலிங்கத்திற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அமைச்சர் பதவியும் இல்லாத நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். விலக்கப்பட்ட நிலையில், ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற நிலையில் ஓ.பி.எஸ்.ஸுடன் கரம் கோர்த்து எடப்பாடிக்கு எதிராக கர்ஜித்தார் வைத்திலிங்கம். தற்போது ஓ-பிஎஸ் அணியில் உள்ள முக்கியத் தலைவர்களே விலகி வரும் நிலையில் வைத்திலிங்கமும் எடப்பாடி அணிக்கு விரைவில் போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அ.தி.மு.க.வில் மீண்டும் வைத்திலிங்கம் இணையும் பட்சத்தில் எஸ்.பி.வேலுமணி மாற்றி யோசிக்கலாம் என்கிறார்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். காரணம், ‘அண்ணாமலையால்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. கூட்டணி வைத்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்’ என்றார் வேலுமணி. ‘இது வேலுமணியின் சொந்தக் கருத்து… அ.தி.மு.க.வின் கருத்து அல்ல’ என ஜெயக்குமார் பதில் கொடுத்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படி பேசுவதற்கு முன்பு வேலுமணியிடம் சம்மதம் கேட்டிருந்தாலும், ‘அ.தி.மு.க.வின் கருத்து அல்ல’ என்று எடப்பாடி சொல்லி ஜெயக்குமார் பேசியது எஸ்.பி.வேலுமணிக்கு கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயம் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியை பா.ஜ.க. பக்கம் கொண்டுசென்றால், தி.மு.க.விடமிருந்து கொங்கு மண்டலத்தை பா.ஜ.க. கைப்பற்றி விடலாம் என ‘மேலிடத்திற்கு’ தூதுவிடப்பட்டிருக்கிறதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய ‘தலை’கள் எல்லாம் பா.ஜ.க.விற்கு தாவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்கிறார்கள்.
அரசியலில் எந்தநேரத்திலும்… எதுவும் நடக்கலாம்..!